நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கை, தமிழக முதல்வர் CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரின் மற்றொரு பதிவில் “ இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் & போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவில்பட்டி சிறையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும் தந்தை, மகன் இருவரின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறிவந்த முதல்வர், சாத்தான்குளம் வழக்கு, சிபிஐக்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, வழக்கு சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.