ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்தியாவில் விவாகரத்து மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை முதலிடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்காலும், தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய பல நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், வீட்டிலேயே குடும்பத்தினருடன் இருந்து பெரும்பாலான ஐ.டி., பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலக்கட்டத்தில் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் விவாகரத்தும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே அதிக பாதிப்பை கொண்ட நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அதேபோல், விவாகரத்து மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளிலும் மும்பையே முன்னிலையில் உள்ளது. அங்கு இந்த வழக்குகள் பதிவாகும் விகிதமானது 3 மடங்கு அதிகரித்துள்ளது. இது சம்பந்தமான வழக்குகள் மட்டும் இதுவரை சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,280 வழக்குகளாக பதிவாகியிருந்த நிலையில், தற்போது 3,480 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பெங்களூரில் சராசரியாக 890 ஆக இருந்த வழக்குகள் 1,645 ஆகவும், டெல்லி 1,080 லிருந்து 2,530 ஆகவும், கொல்கதாவில் 350 லிருந்து 890 ஆகவும் உயர்ந்துள்ளது