உடலின் மத்திய பகுதியாகவும், ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகவும் உள்ள வயிற்று பகுதியை முறையாக பேணுவதை பழக்கமாக்கினால் உடலின் மற்ற பகுதிகளை தாமாகவே சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குகிறது.

உண்ட உணவு சரியான நேரத்தில் ஜீரணமாக வேண்டும். பசி எடுத்தவுடன் உணவு உண்ண வேண்டும். உணவின் சத்துப்போக மீதமுள்ளவை (மலம், சிறுநீர்) தினமும் சரியாக வெளியேற வேண்டும். வயிறு பெரிதாக இல்லாமல் சாதாரணமாக இருக்கவேண்டும். வாயு தொந்தரவு எதுவும் இருக்கக் கூடாது. இப்படியிருந்தால் உங்கள் உடலின் மத்திய பகுதி (வயிறு) சரியாக உள்ளது என்று அர்த்தம்.
இன்றைய சூழலில் காலையில் பெரும்பாலானோருக்கு பசி இருப்பது இல்லை. வேறுவழியில்லாமல் உணவை உண்கிறார்கள். உண்ட உணவு ஜீரணமாகாது. வயிறு உப்புசமாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி வரும். முதுகுவலி வரும். உட்கொண்ட ஆகாரம் செரிக்காமலேயே மலமாக வெளியேறும்.
இப்படி உணர்பவர்களுக்கான தீர்வு யோகக்கலையில் உள்ளது. யோகாவும் நமது பழக்க வழக்கங்களையும் சற்று மாற்றிக் கொண்டால் போதும். எல்லா வியாதிக்கும் மூலகாரணம் வயிறு தான் இந்தப் பகுதி சுத்தமாக இருந்தால் உடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.
பொதுவாக மனிதர்கள் வீட்டிலும் சரி, வெளியில் ஹோட்டலில் சாப்பிடும் பொழுதும் கவனத்தை சாப்பாட்டில் வைப்பதில்லை. குடும்ப விஷயங்கள், பொது விஷயங்கள் போன்றவற்றைப் பேசிக் கொண்டே சாப்பிடுகின்றோம். அடிப்படையில், நாம் எண் ணும் உணர்வுகளுக்கு ஏற்பவே உடலில் உமிழ்நீர் சுரக்கிறது. சாப்பிடும் பொழுது கவனம் சாப்பாட்டில் இருந்தால் அந்த உணவை ஜீரணம் செய்யும் சுரப்பிகள் வாயில் உணவு மென்று கொண்டிருக்கும் பொழுதே வயிற்றில் சுரக்கும். ஆனால் வாயில் உணவை வைத்து வேறு விஷயம் பேசும் பொழுது, அந்த விஷயத்திற்கேற்ப உமிழ்நீர் சுரக்ககின்றது. உணவை ஜீரணம் செய்யும் சுரப்பிகளுக்கு வேலை இருப்பதில்லை. அதனால் உண்ட உணவு ஜீரணமாவதில்லை.

முதல் பழக்கம் சாப்பிடும் பொழுது வேறு கவனச் சிதறல் இருக்கக்கூடாது. சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்த பழகிக்கொள்வது அவசியம்.
சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து மூன்று டம்ளர் நீர் அருந்தவும். பின்பு தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுதெல்லாம் நீர் மறக்காமல் அருந்தவும். பெரும்பாலானோர் தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் உணவு ஜீரணமாகாமல் மத்தியப் பகுதி (வயிறு) பாலைவனமாகி விடுகின்றது. சில நபர்கள் ஒரு கவளம் சாப்பாடு உண்ட உடன் அரை டம்ளர் தண்ணீர் அருந்துவர். இப்படி சாப்பாட்டின் இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்துவர். இதுவும் அஜீரணமாக, வயிறு உப்பிசமாக இருக்கும். எனவே சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து நீர் அருந்தவும். தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுது நீர் பருகவும். தண்ணீர் குடிக்கும் பொழுது வேகமாக, மடமடவென தண்ணீர் குடிக்கக் கூடாது.
பொறுமையாக ஒவ் வொரு மடக்காக உள் இறங்கியவுடன் அடுத்த அவுன்ஸ் தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் வேகமாக குடித்தால் சிலருக்கு தும்மல் வந்து மூக்கு வழியாக தண்ணீர் வரும். நம் உணவுக்குழாய் மிக மென்மையானது. மூச்சுக்குழாயும் மென்மையானது. வேகமாக தண்ணீர் குடிக்கும் பொழுது மூச்சுக்குழாய், உணவுக்குழாய் இரண்டும் திறந்துவிடும். அதனால் மூச்சுக்குழாயில் தண்ணீர் செல் வதால் மூக்கில் நீர் வரும்.
காலை 9.00 மணிக்குள் காலை சிற்றுண்டி, மதியம் 1.00 மணிமுதல் 1.30க் குள் மதிய உணவு. இரவு 7.00 மணிமுதல் 8.00 மணிக்குள் இரவு உணவு உண்ண வேண்டும். பசிக்கின்றபொழுது உணவு எடுக்காமல் 11.00 மணிக்கு காலை உணவு எடுப்பது வயிறு முழுக்க வாயு சூழ்ந்து வயிறு உப்பிசமாகிவிடும். இதை மாற்றிக் கொள்ளுங்கள்.
வயிற்றில் புண் (அல்சர்) குடல்புண் அனைத்திற்கும் சரியான நேரத்தில் சாப்பிடாததே காரணமாகும். இந்த அல்சர் அதிகமாகி வயிற்றில் கேன்சர் வரும் அளவு சிலர் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே சரியான நேரத்தில் பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும். 24 மணி நேரமும் உடல் நம்முடன் பேசுகின்றது. நாம் அதனை அலட்சியம் செய்வதால் நோய் வருகின்றது. நம் உடல் தேவைகளை உணர்ந்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
நல்ல சத்தான ஆகாரம் பழவகைகள், கீரைகள், பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழம் இவ்வாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.