உலக அளவில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி சவுத்தம்ப்டனில் இன்று தொடங்குகிறது.

கடைசி சர்வதேச போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே மார்ச் 13 அன்று நடைபெற்றது. பின்னர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல ஆறுதலாக இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இதுவரை இல்லாத அளவிற்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 117 நாட்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், கொரோனா முன்னெச்சரிக்கையாக போட்டியை காண ரசிகர்கள் யாருக்கும் மைதானத்திற்கு வர அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக வீரர்களை உற்சாகப்படுத்த செயற்கையாக ரசிகர்களின் கரகோசங்கள் எழுப்பப்படுகிறது. தொடர்ந்து வீரர்கள் தங்களிடையே இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கைகளை குலுக்கவும், பந்தின் மீது உமிழ்நீரை பயன்படுத்தம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைதானம் முழுவதும் அவ்வப்போது கைகளை கழுவ ஏதுவாக சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை 2019 க்குப் பிறகு, போட்டியின் போது ஒரு வீரருக்கு கடுமையான காயம் ஏற்பட்டால், அதற்கு பதிலாக களம் இறங்கும் மற்றொரு வீரர் முழு போட்டிகளிலும் விளையாட முடியும் என்று ஐ.சி.சி கூறியுள்ளது. அதேபோல கொரோனா காலத்திலும், ஒரு வீரருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால், அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.