ஹைதராரபாத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் மறுப்பதால், 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மருத்துவமனையில்அட்மிட்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற ஒரே உறுதியுடன் தான் கொரோனா நோயாளிகள் அந்த கொடிய நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுகின்றனர். ஆனால் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு கூட, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 50-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுதான். தனது மகன்கள் வந்து தன்னை வீட்டிற்கு அழைத்து செல்வார்கள் என்று காத்திருப்போரில் 93 வயதான மூதாட்டியும் ஒருவர்..
ஹைதரபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்ற 50-க்கும் மேற்பட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்ய தயாராக இருந்தும், அவர்களின் குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து செல்ல மறுக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தொலைபேசியிலும் அழைத்தாலும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிலர், மருத்துவமனை நுழைவுவாயிலேயே சில மணி நேரம் காத்திருந்தனர்.

ஆனால் அவர்களை அழைத்து செல்ல யாரும் வரதாதால், மீண்டும் மருத்துவமனைக்கே சென்று உதவி கோரியுள்ளனர். எங்கே செல்வது என்ற தெரியாத 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகியுள்ளனர்.
காந்தி மருத்துவமனை நிர்வாகி டாக்டர் பிரபாகர் ராவ் இதுகுறித்து பேசிய போது “ அனைத்து நோயாளிகளும் நலமாக உள்ளனர். அவர்களிடம் எந்த அறிகுறிகளும் இல்லை. அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு தகுதியானவர்கள் என்று அவர்களை நாங்கள் டிஸ்சார்ஜ் செய்தோம். ஆனால் அவர்களின் குடும்பத்தினர், அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல மறுக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
பெயர் சொல்ல விரும்பாத மூத்த மருத்துவர் ஒருவர் பேசிய போது “ கொரோனா நோயாளிகளை திரும்ப வீட்டிற்கு அழைத்தால், தங்களுக்கு நோய் தொற்று பரவக்கூடும் என்று குடும்ப உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர். இந்த பயம் காரணமாகவே, தங்கள் சொந்த பெற்றோர்களை கூட, அழைத்து செல்ல முடியாத சூழலில் மக்கள் இருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அதிகப்படியான நோயாளிகள் காரணமாக, டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களை குடும்பத்தினர் அழைத்து செல்லாததால், அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்வதும், மீண்டும் அட்மிட் செய்வது கடினமான செயல் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.