சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசை கண்டித்தும் இன்று சேலம் எருமாபாளையம் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சேலம் மாவட்டம் வட்டக்காடு மற்றும் குள்ளம்பட்டி பகுதியில் முன்பு நடந்த எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 32 விவசாயிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள் தங்கள் மாடு, கன்றுகளுடன் கையில் கருப்பு கொடியேந்தியும் கருப்பு நிற மாஸ்க் அணிந்தும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
எட்டு வழி சாலைக்கு ஆதரவாக இருக்கும் அரசியல்வாதிகளை கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள், ஏற்கனவே நடந்த போராட்டத்தில் விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ” மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. மேலும் போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மிரட்டல் விடப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்” என கூறினர்.