கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், போலீசாரை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றூ அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துகுக்டி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜின் மகன் பெனிக்ஸ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி, ஊரடங்கை மீறி, கடையை திறந்து வைத்ததாக, ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காவல்நிலையத்தில், பெனிக்ஸ் முன்பு, அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்தாகவும், அதனை தட்டிகேட்ட பெனிக்ஸுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் தந்தை, மகன் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடுத்தடுத்து இன்று உயிரிழந்தனர். அவர்கள் இறந்ததற்கு போலீசாரின் கொடூர தாக்குதல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து சாத்தான்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உள்ளிட்டோர் போராட்ட குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவலர்களை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.