சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக இருந்த அஜித் ஜோகி இன்று காலமானார். அவருக்கு வயது 74.

முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களாகவே, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை அவரது மகன் அமித் ஜோகி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சத்தீஸ்கர் மாநிலமும் தந்தையின்றி தவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தந்தையின் இறுதி சடங்கு, நாளை தங்களது சொந்த ஊரில் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சராக அஜித் ஜோகி காங்கிரஸ் கட்சி சார்பில் பதவியேற்றார். 2000 – 2003 வரை சத்தீஸ்கர் முதல்வராக இருந்த அஜித் ஜோகி, மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அரசியல் ஈடுபடுவதற்கு முன்பு ஐஐடி பேராசிரியராக இருந்த அவர், 1981 – 1985 வரை இந்தூர் மாவட்ட ஆட்சியராகவும் இருந்துள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பிய அவர், கட்சிக்கு முரணாக செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற புதிய கட்சியையும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.