இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 18,552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 5-ம் கட்டமாக அமலில் உள்ளது. ஆனால் இம்முறை அன்லாக் 1.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக ஒரு நாளைக்கு 15,000-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதன் விளைவாக உலகளவிலான பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் முதன்முறையாக 18,552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,08,953-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 384 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 15,685-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 1,97,387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,95,880 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 149 நாட்களில் இந்தியா 5 லட்சம் கொரோனா பாதிப்பை எட்டியுள்ளது.
1.52,765 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 7,106 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்து அதிகபட்ச பாதிப்புகளுடன் தலைநகர் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது.

டெல்லியில் மொத்த 77,240 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 2,492 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 74,622 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 957 பேர் உயிரிழந்துள்ளனர்.