தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் இன்று மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193- ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,276 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,521-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 162 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,271-ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 90 பேருக்கும், ராணிப்பேட்டையில் 68 பேருக்கும், கடலூரில் 63 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 576-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 842 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27,624-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.