டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவமும், தமிழகத்தில் சாத்தான் குளத்தில் நடைபெற்ற சம்பவமும் ஒன்றுதான், குற்றம் நிரூபனமானால் குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் என ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கர்ஜித்துள்ளார்.

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு நாட்டு நடப்பு மற்றும் சமூக விரோத சம்பவங்கள் தொடர்பாக அதிரடி கருத்துக்கள் தெரிவிப்பது வழக்கம். குறிப்பாக தமிழக மக்களுக்கு இவர் மிக நெருக்கம் என்றே கூறலாம். தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களான ஜல்லிக்கட்டு விவகாரம் முதல், சசிகலா, ரஜினி அரசியல் விவகாரம் வரை நிறைய கருத்துக்களை துணிந்து சொல்பவர். இதனால் தமிழக மக்களுக்கு இவர் நன்கு பரிச்சயம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வரையில் சென்றுள்ள சாத்தான்குளம் விவகாரத்துக்கு ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை நிர்பயா வழக்குடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார் கட்ஜு. அன்று பலாத்காரம் செய்யப்பட்டபோது, “நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு தடியால் தாக்கியும் நுழைத்தும் சித்ரவதை செய்ததை போலவே, சாத்தான்குளம் சம்பவமும் நடந்துள்ளதாக” தெரிவித்துள்ளார். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் எனில், அந்த சம்பவம் தனிமனிதனின் மிருக குணத்தால் நிகழ்த்தப்பட்டது. ஆனால் சாத்தான்குளம் சம்பவம் போலீஸ்காரர்களின் அதிகார வெறியால் செய்யப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டால், தூத்துக்குடி வழக்கிலும் சம்பந்தப்பட்ட போலீசார் குற்றவாளிகளாக இருந்தால் தூக்கிலிட வேண்டும்” என்கிறார் கட்ஜு. மாஜிஸ்திரேட் விசாரணை முடிப்பதற்குள் கைது செய்ய முடியாது என்று சட்டம் சொல்கிறது.. உண்மையில், போலீசார் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துவிடுவார்கள்.

விசாரணை முடியும் வரை அவர்கள் காத்திருப்பதில்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டிருப்பது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஜார்ஜை கொன்றவர்களுக்கு செய்ததை போலவே அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த விசாரணையை அதிவேகமாக முடித்து, போலீசார் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டால், கடுமையான முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது நாடு முழுவதும் உள்ள போலீசாருக்கும் தெரிய வேண்டும்” என தெரிவித்துள்ளார் கட்ஜு.