தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கக் கூடாது என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ளது. மேலும், சோதனைகளை அதிகப்படுத்துவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்படுத்த தேவையில்லை என தெரிவித்தனர்.
கொரானா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் சமூக பரவல் இல்லை. சென்னையில் நோய்த்தொற்று சமூக பரவலாக மாறியிருந்தால் உயிரிழப்புகள் அதிகமாகி இருக்கும் சென்னையில் பொதுப்போக்குவரத்தை தளர்த்தினால் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்களை அதிக கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். தமிழகத்தில் கொரானாவின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கூடுதல் கவனம் தேவைப்படுவதால், அங்கு ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தற்போதைக்கு தொடங்கக் கூடாது எனவும் வலியுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரானா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேவையை பொறுத்து கூடுதல் தளர்வுகளை அளிக்கலாம் என முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.