மதுரையில் வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, நோய்த்தொற்று அதிகமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் கடந்த சில நாட்களாக, சராசரியாக 200-க்கும் மெற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் உள்ள முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும்.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும அனுமதி வழங்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவ்வித செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது. பொதுஇடங்களுக்கு செல்லும் போது அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.