மதுரையைத் தொடர்ந்து தேனியிலும் நாளை மாலை முழு ஊரடங்குஅ மலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை 64,000-ஐ கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்திலும் நாளை மாலை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தீவிர கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காய்கறி, பழக்கடைகள், பால், குடிநீர், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடை ஆகியவற்றை திறக்க அனுமதியில்லை என்றும், ஹோட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனியில் இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தம் 284 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 153 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 124 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.