ஆந்திர மாநிலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பர்வாடா என்ற இடத்தில் சானியர் லைஃப் சயின்ஸஸ் ( Sainor Life Sciences) என்ற தொழிற்சாலை உள்ளது. அங்குள்ள மருந்து பிரிவில் நேற்றிரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட பென்சிமிடாசோல் என்ற வாயுக்கசிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி உதய்குமார் “ தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. வாயுக் கசிந்த போது சம்பவ இடத்தில் இருந்த 2 பேர் இறந்துள்ளனர். எனினும் வாயுக்கசிவு மற்ற இடங்களுக்கு பரவவில்லை.” என்று தெரிவித்தார்.
இதனிடையே இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், யாரும் பீதியடைய தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்பதும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.