ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு இந்திய ராணுவத்தை கிண்டல் செய்வதா என்று திருமாவளவனுக்கு காய்த்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 5 மற்றும் 6 தேதிகளில் லடாக்கில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து, இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது. அதன் பின்னர், இந்திய எல்லைக்குட்பட்ட லடாக்கில் உள்ள பாங்காய் ஏரியில் படகுகளில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியதாகவும், சீன ஹெலிகாப்டர்கள் இந்திய பகுதிகள் பறந்ததாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

மேலும் பாங்கோங் ஏரியில் இருந்து 200 கி.மீ தொலைவில், விமானப்படை தளத்தை சீனா கட்டி வருவதன் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படை தளபதி பிபின்ராவத் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த சூழலில் சீனா – இந்தியா விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். மேலும் சீன எல்லை விவகாரத்தில் மோடி அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் சீன விவகாரத்தில் மோடி – ட்ரம்ப் இடையே எந்த உரையாடலும் நடைபெறவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இந்திய – சீன எல்லை விவகாரத்தில் என்ன நடக்கிறது மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில் “ டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலேஆஜராகத் துடிக்கிறார்.பாகிஸ்தானோடு உரசல், சீனாவோடுசிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்துபண்ண ‘நான்ரெடி நீங்கரெடியா’என்கிறார்? அவர் மோடிக்கு ஆதரவாகப் பேசுகிறாரா?கிண்டல் பண்ணுகிறாரா? இந்திய-சீன எல்லையிலோ நம்படையினர் ‘திரும்பிபோ’ என பதாகை பிடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக வைரலான மீம் ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து திருமாளவளவனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக ஆதரவாளர் காய்த்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். அவரின் பதிவில் “ எவ்வளவு அசிங்கமான செயல்..? நீங்கள் மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் மீம்ஸ் போடுவது மட்டும் தான் உங்கள் வேலை. என்ன கொடுமை.. இந்த கொடுமையை யாரும் கேட்க மாட்டிங்களா..? ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு இந்திய ராணுவத்தை கிண்டல் செய்கிறீர்கள்.. உருப்படியாக ஏதாவது செய்துவிட்டு, பிறகு மற்றவர்களை பற்றி பேசுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.