இந்துமத அவமதிப்பு சர்ச்சையில் சிக்கிய காட்மேன் இணையதள தொடர் இயக்குனர், தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜீ 5 ஓடிடி தளத்தில் ‘காட்மேன்’ என்ற வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. இதில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பாபு யோகேஸ்வரன் இந்த தொடரை இயக்கியுள்ளார். இந்த சீரிஸின் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து மதம் தொடர்பான காட்சிகளும், பிராமணர் சமூகம் குறித்த வசனங்களும், அதிகமான ஆபாச காட்சிகளும் இடம் பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காட்மேன் இணையதள தொடர் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட மதத்த்தை அவதூறாக சித்தரிப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்மேன் வெப் சீரிஸின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அத்தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சினிமாவை போன்று வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை இல்லாததால் படைப்பாளிகள், ஆபாச காட்சிகளையும், வன்முறை காட்சிகளையும் அதிகமாக புகுத்தி வருவதாக பலரும் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.