நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியகாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே சுஷாந்தின் மறைவிற்கு திரைத்துறையினர் மட்டுமின்றி, அரசியல் மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில் “ சுஷாந்த் சிங்.. திறமையான இளம் நடிகர், வெகு விரைவிலேயே சென்றுவிட்டார். பொழுதுபோக்கு துறையில் அவரின் வளர்ச்சி பலருக்கும் உத்வேகத்தை அளித்தது. அவரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது என்ணங்கள் இருக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் “ சுஷாந்த் சிங் இறந்த் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரும் எனது ஊரான பாட்னாவில் இருந்து வந்தவர் தான். அவர் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது ஆனால் வெகு விரைவிலேயே சென்றுவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சுஷாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ உண்மையிலேயே இந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திறமையான நடிகர்.. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் பதிவில் “ இதயத்தை நொறுக்கும் செய்தி.. என்னால் இதனை நம்ப முடியவில்லை. ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
துல்கர் சல்மான், அனுஷ்கா ஷர்மா, சமந்தா, திஷா படானி உள்ளிட்ட பல பிரபலங்களும் சுஷாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த் தான், தோனி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு மிகப்பெரிய பாராட்டை இப்படம் பெற்று கொடுத்தது.
பல கிரிக்கெட் வீரர்களும் சுஷாந்தின் மறைவுக்கு சமூக வலைதளங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி, ஹர்பஜன் சிங், விரேந்திர ஷேவாக், இர்பான் பதான் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.