
டெல்லி: கொரோனா வைரஸினை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருவதால் இந்தியாவில் தொற்றின் பரவலை கைமீறி சென்றுவிட அரசு விட்டுவிடவில்லை என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினர். நேற்று 21 மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக இன்று கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உட்பட 15 மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் கொரோனா பாதிப்பினை கைமீறிச் சென்றுவிட அரசு விட்டுவிடவில்லை என்றும், நாளுக்கு நாள் குணமடைந்தோர் விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ள மாநிலம் முழுவதும் மருத்துவர்களுக்கு ஒருகோடி பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கொரோனா பரவலை அதிகரிக்க தொடங்கியதிலிருந்து, பரிசோதனை மேற்கொள்ள நாடு முழுவதும் 900 ஆய்வகங்கள் உள்ளது என தெரிவித்த மோடி, பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் அனைத்து மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் கொரோனாவினை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருவதாக மோடி தெரிவித்துள்ளார்.

அதோடு மாநில அரசுகளின் முயற்சியால் அனைத்து மக்களும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வினை கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக நாடு முழுவதும் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு தான் கொரொனா பரவலை கட்டுப்படுத்த உதவியாக இருந்தது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.