பொதுமுடக்கத்தின்போது அனுமதியின்றியோ, அடையாள அட்டை இன்றியோ வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் நாளை முதல் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு ஊரடங்கு காலத்துக்கு சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் அருண் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் பொதுமுடக்கத்தின் போது அரசு தெரிவித்துள்ள அறிவிப்புகள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் சேவை ஊர்திகளுக்கு அனுமதி உண்டு என்று தெரிவித்துள்ள அவர், மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் ஆட்டோ, டாக்ஸி பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுமுடக்கத்தின்போது பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தண்ணீர், பால், பெட்ரோல், சமையல் எரிவாயு, வங்கிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் அடையாள அட்டையும், அனுமதிச் சீட்டும் வைத்திருக்க வேண்டும் என அருண் தெரிவித்துள்ளார். விமானம் மற்றும் ரயில் பயணிகள் தங்களின் பயணச் சீட்டுக்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், சோதனையின் போது அதனைக் காட்ட வேண்டும் என்றும் அனுமதியின்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு உதவி செய்வோர் செல்வதற்கு வாகன அனுமதி வழங்கப்படும் என்றும், அவர்கள் இ பாஸ் வைத்திருக்கவேண்டும் எனக் கூறியுள்ள கூடுதல் ஆணையர் அருண், இந்த உத்தரவுகளுக்கு சுகாதாரத்துறை, மாநகராட்சி, மருத்துவத்துறை, நீதித்துறை மற்றும் பத்திரிக்கைத்துறை ஆகியோருக்கு விதி விலக்கு அளிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்