காட்மேன் இணையதள தொடர் சர்ச்சை குறித்து ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், ‘காட்மேன்’ என்ற இணையதளத் தொடர் உருவாகி உள்ளது. இதில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளங்கோ என்பவர் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ் வரும் 12-ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சீரிஸின் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து மதம் தொடர்பான காட்சிகளும், பிராமணர் சமூகம் குறித்த வசனங்களும், அதிகமான ஆபாச காட்சிகளும் இடம் பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த இணையதள தொடரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் காரணமாக 12-ம் தேதி வெளியாகவிருந்த தொடர், மறு தேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே காட்மேன் இணையதள தொடர் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இயக்குனர் யோகேவரம், தயாரிப்பாளர் இளங்கோ ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த -ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதனால் இருவரும் இன்று ஆஜராக வேண்டும் என்று மீண்டும் நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ காட்மேன் பட இயக்குனர், தயாரிப்பாளருக்கு 3 ம் தேதியே விசாரணைக்கு ஆஜராகக் கோரியும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு மீண்டும் 6 ம்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் போன்ற அநாகரீகமான நபர்கள் சட்டத்தை மதிக்க மாட்டார்கள். இவர்களை கைது செய்து முறைப்படி விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.