எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போன தந்தை, மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாக இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரிலும் #சாத்தான்குளம், #JusticeForJeyarajAndFenix போன்ற ஹேஷ்டாகுகள் கடந்த 4 நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே” என்று குறிப்பிட்டுள்ளார்.