தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் கோடை காலமாகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாள் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வந்தது அதன் காரணமாகவே இந்த வருடம் கோடை காலம் என்பது கோடைகால சாயலே இல்லாமல் கடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பகல் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டினாலும் இரவு நேரங்களில் அதற்கு இதமாக பரவலாக மழை பெய்து வந்ததால், அந்த கத்தரிவெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள இந்த மழைப்பொழிவு உதவியாக இருந்தது.
அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி போன்ற 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இத்தகைய நிலையில், கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மேலும் வால்பாறை உள்ளிட்ட சில இடங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதேபோலவே கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய இடுக்கி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.