ஹெல்மெட்டும், சீட் பெல்ட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாக ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் விதமான பெட்ரோல் பங்குகளில், விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
‘ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை.. சீட் பெல்ட் இல்லை என்றால் டீசல் இல்லை’ என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை பெட்ரோல் பங்குகளில் வைக்க வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

மேலும் மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரியுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மேற்கு, வடக்கு, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்கள் தங்கள் சரகத்துக்குள் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இந்த உத்தரவை பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.