ஒரே நாளில் முதன்முறையாக 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ கடந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை, கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த 5 நாட்களாகவே சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் இன்று மட்டும் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,786-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 861 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15,762-ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.