
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவியை ஆணவப்படுகொலை செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் காதலன் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையை அடுத்த இடையன்வலை பகுதியை சேர்ந்தவர் சாவித்ரி. அரசுகலைக்கல்லூரியில் 3 ஆம் ஆண்டு விலங்கியல் பிரிவில் படித்துவந்த இவரும் அதேபகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில்,பெண் வீட்டார் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, சாவித்ரி-விவேக் இருவரும் திருமணம் செய்வதற்காக வீட்டினை விட்டு வெளியேறியுள்ளனர்.காரில் கரூர் நோக்கி சென்ற போது போலீசார் விசாரணையில் ஈடுபட்ட பின் அவர்களை குளித்தலை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். விசாரணையில் விவேக் என்பவருக்கு இன்னும் திருமண வயது இல்லை என காரணம் காட்டி போலீசார் மீண்டும் அவர்களது பெற்றோர்களிடமே ஒப்படைத்துவிட்டனர்.

மேலும் சாவித்ரி மற்றும் விவேக்கின் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வதாக பெண் வீட்டார் போலீஸில் ஒப்புதல் அளித்த பின் அவர்களை அழைத்து சென்றுள்ளனர்.ஆனால் சில நாட்களிலியே சாவித்ரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுக்குறித்து தகவல் வெளியே தெரிவதற்குள் பெண்ணின் உடலை பெற்றோர்கள் தகனம் செய்துள்ளனர். இச்சம்பவத்தினை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் விவேக்,என் காதலி சாவித்ரி நிச்சயம் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்க மாட்டார் எனவும் அவர்களது குடும்பத்தினர் தான் ஆணவப்படுகொலை தான் செய்திருப்பார்கள் என புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.