உடுமலை ஆணவக் கொலை வழக்கில் கவுல்சல்யாவின் தந்தையை விடுதலை செய்தும், 5 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்தனர். இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவுடன் சென்ற சங்கர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக உடுமலைபேட்டை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கவுசல்யாவின் குடும்பத்தினர் ஏற்பாட்டில் தான் ஆணவ படுகொலை சம்பவம் நடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனையடுத்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, மரண தண்டனையை உறுதி செய்ய கோரும் நடைமுறைப்படி, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம், 3 பேர் விடுதலையை எதிர்த்து உடுமலை காவல் துணை கண்கானிப்பாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த அனைத்து வழக்குகள் மீதும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விரிவான விசாரணை நடத்தினர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஸ்டீபன் ராஜூ மற்றும் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.