மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இடவசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிர்ஹன் மும்பை மாநகராட்சித் தகவல்களின் படி 645 ஐசியு படுக்கைகளில் 99 சதவீதம் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 4,292 படுக்கைகளில் 65 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன. 373 வென்ட்டிலேட்டர்களில் 73 சதவீதம் உபயோகத்தில் உள்ளன. நேற்று மட்டும் மும்பையில் மேலும் 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளன. இதன் மூலம் மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 35,273 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 38 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இடவசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது என பிரபல செய்தி நிறுவனம் வீடியோவுடன் செய்தி வெளியிட்டுள்ளது.