
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளுக்கே இன்னும் தீர்வு காணப்படாத போது, சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி நீதி கிடைக்கும் என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் விசாரணைக்கைதிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து பல்வேறு எதிர்ப்புகள் நாடு முழுவதும் எழுந்துவரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் அரசின் கொள்கை முடிவில் தலையிடாது முடியாது எனவும், விசாரணையின் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டாலும் முறையான விசாரணை நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது என பல தரப்பினர் குற்றம் சாட்டிவருகின்றனர். அந்த வரிசையில் இது தொடர்பாக கருத்தினை தெரிவித்த மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன. தற்போது இந்த வழக்கினையும் சிபிஐ-யிடம் ஒப்படைப்பது ஏற்புடையதல்ல என தன்னுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் மேல் ஐ.பி.சி 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து புலனாய்வுத்துறையினரிடம் சாத்தான்குளம் வழக்கினை ஒப்படைக்கவேண்டும் எனவும் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.