
சிவகங்கை: கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வராய்ச்சியில் 17 ஆம் நூற்றாண்டினை சேர்ந்த தங்க நாணயம் கிடைத்துள்ளதை பார்க்கும் போது, பல நூற்றாண்டுகள் காலம் வரை மக்கள் அங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைப்பதாகவே தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை 6 ஆம் கட்டஅகழாய்வு பணியினை மேற்கொண்டுவருகிறது. ஏற்கனவே தமிழர்கள் வைகை ஆற்றங்கரையோரத்தில் செம்மையாக வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்று வியப்பினை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கீழடியில் அகரம் என்ற பகுதியில் மாநில தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 16 – 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க காசு கிடைத்துள்ளது. இந்த தங்க நாணயம் ஒரு செண்டிமீட்டரும் , 300 மில்லி கிராம் எடையும் கொண்டுள்ளது. இந்த தங்க நாணயத்தின் முன் பக்கத்தில் நாமம் போன்றும், நடுவில் சூரியன் போன்றும், கீழே சிங்க போன்ற உருவமும் காணப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் 12 புள்ளிகள் அதன் கீழ் 2 கால் மற்றும் இரண்டு கைகளுடன் கொண்ட உருவம் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனை வீரராயன் பணம் என்று அழைப்பர்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கீழடியில் ஏற்கனவே நடைபெற்றுவரும் அகழாய்வில்,அகரம் பகுதியில் 11ஆம் நூற்றாண்டு காலம் வரை தோண்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் காசு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதால் இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வைகை கரையினை ஒட்டி நடைபெற்றுவரும் இந்த அகழாய்வில் தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷங்கள் பழங்காலத்தில் தமிழர்கள் செம்மையோடு, அழகான கட்டமைப்புகளோடு எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை மேலும் உலகிற்கு பெருமையோடு எடுத்துரைக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.