ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், உயிரிழப்பில் அடுத்த உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, “கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சில நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அது முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் எண்ண வேண்டாம். மேலும், கொரோனா தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என அவர் எச்சரித்துள்ளார்.