சென்னையில் சட்டவிரோதமாக இ பாஸ் வழங்கி, நூற்றுக்கணக்கான மக்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைத்த மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பவர், முறையாக விண்ணப்பித்து உரிய ஆவணங்களை சமர்பித்தால் மட்டுமே இ- பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் நபர்களுக்கு, உரிய ஆவணங்கள் இருந்தாலுமே அவ்வளவு எளிதில் இபாஸ் கிடைப்பதில்லை. ஆனால் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவது போல விண்ணப்பித்து, சட்ட விரோதமாக இ பாஸ் வழங்கிய கும்பல் தற்போது சிக்கியுள்ளது.
மாநகராட்சி மூத்த அதிகாரி, இ பாஸ் வழங்கும் பணியில் ஈடுபட்ட குமரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர், தனியார் கால் டாக்ஸி ஒட்டுனர்கள் 2 பேர் என 5 பேரை சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஒரு மாதமாக, நூற்றுக்கணக்கானோரை சென்னையில் இருந்து சட்டவிரோதமாக வெளியூர்களுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. இப்படி அவசர காரணங்கள் ஏதும் இல்லாமல் வெளியூர் சென்றவர்கள் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மூலம் இ – பாஸ் ஒன்றிற்கு ரூ.3,000 முதல் ரூ. 8,000 வரை கொடுத்து பெற்றுள்ளனர் என்பதாகவும் கூறப்படுகிறது.

உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல விரும்புவர் விண்ணப்பித்தால் மதுரை மாவட்ட நிர்வாகம் தான் இ – பாஸ் வழங்குவதை பரிசீலிக்கும். ஆனால் மற்ற மாவட்டத்திலிருந்து – சென்னைக்கு விண்ணப்பித்து, இ பாஸ் வழங்குமிடத்தில் இருக்கும் அதிகாரி குமரன் மூலம் அனுமதி பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது இந்த கும்பல்.
இ-பாஸை வைத்து டிராவல்ஸ் கார் ஓட்டுநர்கள் மூவரும் சென்னையிலிருந்து பலரையும் அழைத்து சென்றுள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர அனுமதி பெற்றுள்ள இ- பாஸை வைத்துக்கொண்டு, எளிதாக அதை போலீசாரிடம் காட்டிவிட்டு, சென்றதும் அம்பலமாகி உள்ளது.

ஒரு மாதத்திற்கு மேல் சட்ட விரோதமாக சென்னையில் இருந்து சென்ற நூற்றுக்கணக்கானவர்களுக்கு இ – பாஸ் கொடுத்து கமிஷன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையில் சட்ட விரோதமாக ரூ. 3,000 முதல் 8,000 வரை லஞ்சம் வாங்கி கொண்டு இ-பாஸ் வழங்கியதும், இதன் மூலம் கடந்த சில நாட்களிலேயே பல லட்சம் ரூபாய் சம்பாத்தித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. மேலும், இ-பாஸ் வழங்கியதில் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனி மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு, இ-பாஸ் அவசியம் என்று முதல்வர் நேற்று அறிவித்தார். ஆனால் சென்னையில் போலி இ பாஸ் மோசடியில் அரசு ஊழியர்களே சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.