
தேனி: தேனி மாவட்டம் பெரிகுளம் நகராட்சியில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருவதால், ஜூன் 21 ஆம் தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனாவின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 56 ஆயிரத்து 845 பேர் பாதிப்படைந்துள்ளனர். தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 193 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், பெரியகுளம் நகராட்சி பகுதியில் 35 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனாவின் தீவிரத்தினை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படி ஜூன் 21 அதாவது நாளைமாலை 5 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கடுமையான ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் பெரிகுளம் நகராட்சி பகுதியில் உள்ள அத்தியாவசிய மளிகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகள், சலூன்கள், உணவகங்கள், அரசு, தனியார் மற்றும் பொது வங்கிகள், இறைச்சி கடைகள், எலெக்டாரானிக் கடைகள் என அனைத்து வணிக நிறுவனங்களையும் மூட உத்தரவிட்ட ஆட்சியர் மறு உத்தரவு வரை இதனை திறக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதோடு நகராட்சி பகுதிகளில் ஆட்டோ, கார் போன்ற அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடுமையாக அமலுக்கு வரும் ஊரடங்கினால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக அத்தியாவசிய மளிகைப்பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை door to door விற்பனை செய்ய அனைத்து வியாபாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.