
சென்னை : சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக 1563 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டுவரும் நிலையில் அதன் தற்போதயை நிலை குறித்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வரின் ஆணைப்படி 574 முதுநிலை மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும்75ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 1563 சிறப்பு முதுநிலை மருத்துவர்கள் சென்னைக்கு வந்து பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 665 மருத்துவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் என நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர்கள் ஏற்கனவே கொரோனா வார்டில் சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்பதால் தான் சென்னையில் வந்து பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
அதோடு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் சென்னைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் செவிலியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா சிகிச்சை மேற்கொள்ள 5 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது எனவும் மேலும் இதனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தன்மை நாளுக்கு நாள் மாறுபட்டுவருவதாக குறிப்பிட்ட சுகாதாரத்துறை செயலர் ஒவ்வொரு நாளும் பலவற்றை கற்றுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.