இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளதால், கொரோனா மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது இடத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று புதிதாக 18,653 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதனால் இன்றைய காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,85,493-ஆக அதிகரித்தது. ஆனால் இன்று மாலையில் மகாராஷ்டிராவில் புதிதாக 5,537 பேருக்கும், தமிழ்நாட்டில் 3,882 பேருக்கும், டெல்லியில் 2,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தற்போது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. அதாவது தற்போது வரை நாடு முழுவதும் மொத்தம் 6,00,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அன்லாக் 1.0 என்ற பெயரில் ஊரடங்கு தளர்வுகள், கடந்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த தளர்வுகளுக்கு பிறகே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. எனவே கடந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 3.94 லட்சம் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரா, ஹரியானா, கர்நாடகா ஆகிய 10 மாநிலங்களில் மட்டும் இந்தியாவின் 90 % கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

சுமார் 27 லட்ச கொரோனா பாதிப்புகளுடன் அமெரிக்க இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 14 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால் இந்த பட்டியலில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 6,54,405 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், 3-வது இடத்தில் உள்ளது.
6 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளுடன் இந்தியா 4-வது இடத்தில் உள்ள நிலையில், ரஷ்யாவை நெருங்க சுமார் 50,000 மட்டுமே குறைவாக உள்ளது. ஒரு நாள் பாதிப்பில் இதே நிலை தொடர்ந்தால், இன்னும் 3 நாட்களில் இந்தியா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.