உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, 21 மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் பேசிய மோடி,
கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும்.
கள நிலவரத்தை இன்று உங்களிடம் இருந்து தெரிந்து கொள்வேன். உங்களின் ஆலோசனை, எதிர்காலத்தில் திட்டங்களை வகுப்பதற்கு பயனளிக்கும். கடந்த சில வாரங்களில் ஆயிரகணக்கான இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர்.

அனைத்து வகையான போக்குவரத்தும் துவங்கிய நிலையில், உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. குணமடைவோர் சதவீதம் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளது. கொரோனாவால், இந்தியாவில் உயிரிழப்பு விகிதமும் குறைவாக உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது என்றார்.
தற்போதைய நிலையில் வெளியே வரும் போது மாஸ்க் அணியாமல் வருவது சரியாக இருக்காது. கைகளை கழுவதும், சானிடைசர்களை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். மார்க்கெட்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியே வர துவங்கியுள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடும்போது, அதனை எதிர்காலத்தில் ஆலோசிக்கும் போது, கூட்டாட்சியில் நாம் எப்படி இணைந்து செயல்பட்டோம் என்பது பற்றி நினைவு கூறப்படும்.
இதைத்தொடர்ந்து, தமிழகம், மஹாராஷ்ட்ரா, மேற்குவங்கம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்த இறுக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளன.