பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கொரோனாவை எதிர்த்து வெற்றிகரமாக போராடி வருவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வளர்ந்த நாடுகளை விட இந்தியா கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாள்வதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ கோவிட் 19-க்கு எதிராக வெற்றிகரமாக போரிடுவது எங்களின் மிகப்பெரிய சாதனை.
அரசாங்கத்தை தவிர முதன்முறையாக மோடியின் தலைமையின் கீழ் 130 கோடி மக்களும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடுகின்றனர். ஜனதா ஊரடங்கு எனப்படும் பொது ஊரடங்கின், கொரோனாவை எதிர்த்து போரிடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கை தட்ட சொல்லியதன் மூலமும், தட்டுகளை ஒலிக்க செய்ததன் மூலமும் ஒரே நாடு ஒரே மனநிலையை மோடி உருவாக்கினார்.

நீங்கள் புள்ளிவிவரங்களை பார்த்தாலே, இந்தியா சிறப்பாக செயல்பட்டிருப்பது தெரியும். நாம் பிரச்சனைகளையும் வலிகளையும் சந்திக்கவில்லை என்று நான் கூறமாட்டேன். இங்கு பெருந்தொற்று பரவவில்லை என்றும் நான் கூறமாட்டேன், உலகளவில் ஒப்பிட்டால், 1 லட்சம் மக்கள் தொகைக்கு வெறும் 12.6% கொரோனா பாதிப்புகளே இந்தியாவில் ஏற்பட்டுள்ளன. உலகளவில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு சராசரியாக 77.6% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 1 லட்சம் பேரில் 582 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது, ஜெர்மனியில் 1 லட்சம் பேரில் 217 பேருக்கும், பிரேசிலில் 1 லட்சம் பேரில் 195 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரம் மூலம் வளர்ந்த நாடுகளை விட இந்தியா சிறந்த முறையில் கொரோனாவை எதிர்த்து வெற்றிகரமாக போராடி வருகிறது என்பது தெளிவாகிறது” என்று அமித்ஷா தெரிவித்தார்.