கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஒரு நாளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டும் நபர்களின் எண்ணிக்கை பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது தான் வேகமேடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஆரம்பத்தில் சொற்ப எண்களில் இருந்த பாதிப்பு தற்போது நான்கு இலக்க எண்களில் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
தொடர்ந்து ஊரடங்கு, சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு தளர்வு என அந்த அந்த நாடுகள் தங்கள் மக்களை காத்துக்கொள்ள பல முயற்சிகள் செய்து வருகிறது. அதே போல் இந்தியாவும் பல யுக்திகளை கையாண்டது. இருப்பினும் அது தோல்வியில் தான் முடிகிறது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த ஊரடங்கு இன்றளவும் பலரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கி கொண்டிருந்தாலும் பெரிதாக நல்ல மாற்றம் இல்லை.
கொரோனா பரவல் தொடங்கிய பொது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் உலக நாடுகள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்து தற்போது வீரியம் எடுத்து 3வது இடத்தில் இருப்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. உலக அளவில் அமெரிக்கா 3,040,833 நபர்களை கொண்டு முதல் இடத்திலும், பிரேசில் 1,626,071 நபர்களை கொண்டு இரண்டாவது இடத்திலும், இந்தியா 720,346 நபர்களை கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஆனால் ஒரு நாள் பரவல் விவரங்கள் அடிப்படையில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இரத்தத்தை பிடித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் ஒரே நாளில் 49,458 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரே நாளில் 22,510 பேருக்கும், 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் ஒரே நாளில் 21,486 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே போல் இறப்பு பட்டியலிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 656 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 474 பேரும், அமெரிக்காவில் ஒரே நாளில் 360 பேரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இது தவிர பரவல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் உள்ளது. இரண்டாவதாக தமிழ்நாட்டின் சென்னை உள்ளது.