சீனாவுடன் போரிட முடியாது என்று இந்தியாவிற்கு தெரியும் என்பதால் தான் மோடி வார்த்தைகளுடன் விளையாடுகிறார் என்று சீன ஊடகம் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய – சீன எல்லையான லடாக்கில் கடந்த ஒரு மாத காலமாகவே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்த்து. கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீன தரப்பிலும் 35 பேர் வரை உயிரிழந்திருக்க கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்தன. எனினும் சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அந்நாடு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.
இதனிடையே லடாக் விவகாரம் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றும், தற்போது இந்திய பகுதிக்குள் யாரும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவில்லை என்றும் தெரிவித்தார். மோடியின் இந்த கருத்து குறித்து எதிர்க்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை எனில், இந்திய வீரர்களை கொன்றது யார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து பிரதமரின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும், அது ராணுவ வீரர்களின் மன உறுதியை குறைக்கும் முயற்சி என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி பேசியது குறித்தும், இந்தியவுடனான மோதல் குறித்தும் சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. “சீனாவுடன் போரிட முடியாது என்று இந்தியாவிற்கு தெரியும்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் “ சீனாவுக்கு எதிரான மனநிலையை இந்தியா கட்டுப்படுத்தாவிட்டால், 1962 எல்லை மோதலுக்கு பிறகு மிகப்பெரிய அவமானத்தை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உறுதியான பதிலை அளிக்க முயற்சிக்கிறார் என்று சீன அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளதாகவும், அந்த நாளிதழ் கூறியுள்ளது. எனினும் தனது நாடு சீனாவுடன் மேலும் மோதலை ஏற்படுத்த முடியாது என்பதை மோடி புரிந்துகொண்டுள்ளதால், அவர் பதற்றத்தை தணிக்க விரும்புகிறார் என்றும் கூறியுள்ளது.

மேலும் “ மோடியின் கருத்துக்கள் பதட்டங்களைத் தணிக்க மிகவும் உதவியாக இருக்கும், ஏனென்றால் இந்தியாவின் பிரதமர் என்ற முறையில், சீனாவை குற்றம் சாட்டும் அரசியல் தலைவர்களுக்கு தார்மீக அடிப்படையை அவர் நீக்கியுள்ளார்” என்று குளோபல் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

“இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்ற பிரதமர் மோடியின் கூற்று, இந்திய மக்களை திருப்திப்படுத்தவும், இந்திய வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் கூறப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது” என்று அந்நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.
எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்திய ராணுத்தினர் மற்றொரு மோதலை தொடங்குவதை தவிர்ப்பதற்காவும், தங்கள் நாட்டின் இராணுவத்தை கட்டவிழ்த்து விட விரும்பாததால், மோடி வார்த்தைகளுடன் விளையாடுகிறார். இராணுவத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மற்றும் சர்வதேச செல்வாக்கிலும் சீனாவின் திறன் இந்தியாவை விட உயர்ந்தது என்று சீன ராணுவ வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு கொந்தளிப்பான தேசியவாதத்தைப் பார்ப்பது இயல்பானது. ஆனால் சீனாவை மேலும் தூண்டிவிடுவதற்காக இந்தியாவின் கொள்கை வகுப்பை தேசியவாதம் கடத்துமா என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. இந்தியா பாகிஸ்தானுடனோ அல்லது பிற அண்டை நாடுகளுடனோ மோதலில் இருக்கும்போது, தேசியவாதத்தின் உண்மையான செயல்பாடுகள் இருக்கக்கூடும், ஆனால் சீனா என்று வந்தால்.. அது வேறு கதை” என்று சீன ராணுவ உயரதிகாரிகள் கூறியுள்ளதும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

சீனா எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இந்திய அரசாங்கமும் இராணுவத் தலைவர்களும் புரிந்துகொள்கிறார்கள், அதே நேரத்தில் இந்திய தேசியவாதிகள் அறியாமையும் ஆணவமும் கொண்டவர்கள் என்று கூறும் சீன ராணுவ உயரதிகாரி, இந்திய ராணுவத்தினர் சில கடுமையான வார்த்தைகளைச் சொல்லக்கூடும், ஆனால் அவர்கள் எங்களுக்கு எதிராக முதலில் துப்பாக்கி சூடு நடத்த துணிய மாட்டார்கள்.” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
“சீன தரப்பும் பதற்றத்தை குறைக்க விரும்புவதாகவும், அதனால் லடாக் மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு விவரத்தை சீன அரசு வெளியிடவில்லை. ஒருவேளை சீனா தர்ப்பில் 20-க்கும் குறைவான உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், அது இந்தியாவிற்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
மோதலைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் இது எந்த நாட்டிலிருந்தும், குறிப்பாக இந்தியாவிலிருந்து ஆத்திரமூட்டல் அல்லது ஆக்கிரமிப்புக்கு சீனா பயப்படுவதாக அர்த்தமல்ல. பெரிய அளவிலான இராணுவ மோதல் நடந்தால், 1962 ல் நடந்த போரைப் போலவே ஒரு வழியைக் குறிக்கும். அது இந்தியாவுக்கு மிகவும் சாதகமற்ற நிலையை ஏற்படுத்தும்.

ஏனென்றால், சீன இராணுவம் அனைத்து வீரர்களையும், ஆயுதங்களையும், உபகரணங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தகவலறிந்த போர் முறையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மிகவும் ஒழுக்கமான வீரர்களையும், அதிகாரிகளையும் மேம்பட்ட தந்திரோபாய விழிப்புணர்வுடன் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், மோதல்கள் வெடித்தால், போக்குவரத்து மற்றும் இராணுவத் தொழிலில் சீனாவின் பெரும் நன்மைகள் மக்கள் விடுதலை இராணுவத்திற்கு இந்தியாவுக்கு எதிராக முழுமையான நன்மைகளை முன்னணியில் பெற உதவும்.
“இதனால்தான் பல ஆண்டுகளாக சீனாவின் பி.எல்.ஏ க்கு எதிராக இந்தியா ஒரு முழு தாக்குதலை நடத்தத் துணியவில்லை. ஆனால் அவ்வப்போது குறைந்த அளவிலான பதட்டங்களை உருவாக்கி வருகிறது” என்று சீன ராணுவ வட்டாரங்கள் கூறுவதாக குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.