இந்தியாவில் நிச்சயம் சமூக பரவல் ஏற்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ ஒரு லட்சத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட விகிதம் இந்தியாவில் தான் மிக குறைவாக உள்ளது. ஒரு லட்சத்தில் ஏற்பட்ட இறப்பு விகிதமும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இந்தியா என்பது மிகப்பெரிய நாடாக இருந்தாலும், இங்கு பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. அதாவது 1% -க்கு குறைவானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புறங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் நாம் நிச்சயம் ‘சமூக பரவல்’ நிலையில் இல்லை. நோய்த் தொற்று எங்கிருந்து பரவுகிறது என்று கண்டறிய முடியாத நிலை ஏற்படுவதையே சமூக பரவல் என்று அழைக்கிறோம். மேலும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக நோய் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே தினமும் சராசரியாக 9,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாவதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கு உள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில், கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருக்கக் கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். எனினும் இதுகுறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் இந்தியாவில் சமூக பரவல் ஏற்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.