உலகளவிலான கொரோனா பாதிப்பில் தற்போது ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 6,73,165-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து ஒருநாள் பாதிப்பில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்நிலையில் இன்று மாலை மாநில அரசுகள், கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்ட நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு 6.9 லட்சத்தை கடந்துள்ளது.
இதனால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதாவது 29 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளுடன் பிரேசில் 2வது இடத்திலும் உள்ளது.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 6,500-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கும், டெல்லியில் 2,500-க்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா உறுதியானது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, கடந்த வாரங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அன்லாக் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின்னரே இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.