எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதில் அளிக்கும் விதமாக, பொருளாதார ரீதியிலான தாக்குதல்களை இந்தியா முன்னெடுத்துள்ளது. கால்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ரயில்வே, பிஎஸ்என்எல், வணிக பொருட்கள் போன்ற துறைகளில் இந்திய சந்தையை இழக்கும் நிலையை சீனா எட்டியுள்ளது.

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சேவையை 4ஜிக்கு மேம்படுத்தும் பணியில், சீன உபகரணங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிருவனம் தனது சேவையை 4ஜிக்கு மேபடுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்க சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில், சீன உபகரணங்களால் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மேம்பாட்டு பணிக்கு அவற்றை பயன்படுத்த வேண்டாம் என அரசு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஒப்பந்தங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. மேலும், சீன நிறுவனங்களை சார்ந்து இருப்பதை குறைத்து கொள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் வலியுறுத்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா – சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்கப் போவதாக “கெய்ட்” ( CAIT ) என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமான டிசம்பர் 2021க்குள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் ஒரு லட்சம் கோடி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உள்ளதாக “கெய்ட்” அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேவால் கூறியுள்ளார். இந்த 500 பொருட்களில் பொம்மைகள், துணிகள், அன்றாட பொருட்கள், சமையலறை பொருட்கள், ஹார்டுவேர்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்புகளே நமது பெருமை என்று தெரிவித்துள்ள கெய்ட் அமைப்பு, சீன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க இந்திய திரை நட்சத்திரங்கள் இனி ஒப்பந்தங்கள் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு இருப்புபாதைகளில், சிக்னல் கோபுரங்களை அமைக்கும் ஒப்பந்தத்தை சீனா ரயில்வே சிக்னல் அண்ட் கம்யூனிகேஷன் (சி.ஆர்.எஸ்.சி) கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. 400 கி.மீ.க்கு மேற்பட்ட ரயில் பாதைகளில் சிக்னலிங் அமைப்புகளை நிறுவும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதில் இந்திய நிறுவனங்களை ஈடுபடுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதனிடையே, சீனாவை ஒட்டியுள்ள இந்திய எல்லைப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நேற்று, உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை கூடுதல் செயலாளர் தலைமையில், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய-சீன எல்லை சாலைகள் திட்டத்தின் 2ம் கட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும், 32 சாலைகளுக்கான கட்டுமான பணிகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கட்டுமான பகுதிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுதல் பணியாளர்களை அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.