கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,996 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.8 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, சராசரியாக தினமும் 9,000 பேருக்கு மேல் நோய் தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,996 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2,86,579-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 357 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 8,102-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,41,029 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94, 041 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 44,517 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,438 பேர் உயிரிழந்துள்ளனர். 36,841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்திலேயே உள்ளது. டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 3,4,5 இடங்களில் உள்ளன.

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 37 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.