
டெல்லி: இந்திய-சீன எல்லை மோதலின் போது உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் தக்க சமயத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கொரொனா பரவலை தடுக்க எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகம், மராட்டியம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதற்கு முன்னதாக நேற்று லடாக்கில் ஏற்பட்ட இந்திய- சீன மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எப்போதும் இந்தியா அமைதியை தான் விரும்பும் எனவும், தேவையின்றி யாராவது தாக்கினால் தக்க சமயத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வீரமும், தீரமும் இந்தியர்களின் பண்பு எனவும், இந்திய இறையாண்மையினை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என இந்திய அரசு திட்டவட்டமாக உள்ளது எனவும் தெரிவித்தார். இதோடு இந்தியாவிற்காக எல்லையில் வீரர்கள் செய்த உயிர்தியாகம் வீண் போகாது எனவும் தெரிவித்துள்ளார்.