வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று இரவு காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.சென்னையிலிருந்து 380 கிமீ தூரத்தில் இருக்கும் தீவிர புயலான “நிவர் புயல்” 6கிமீ கேக்கத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் இந்த நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிப்பு ஏற்பட்டால் உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இதன் படி 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கின. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் புற நகர் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் மட்டும் புயல் எச்சரிக்கை கூண்டு 7ம் எண்ணும், சென்னை, நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 6ம் எண் கூண்டும், காரைக்காலில் 5ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. இது தவிர, உள்ளூர் எச்சரிக்கைக்காக பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு 3 ஏற்றப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது காற்று வேகமாக வீசும் என்று கூறுவதால் ஆபத்தை தவிர்க்க பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
பழைய வீடுகளும் இடிந்து விழும். மின்சாரக் கம்பங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், கம்பங்கள், சாய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதே போன்ற பாதிப்புகள் திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளில் அரசு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பிலும், வருவாய்த்துறை சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. புயலில் இருந்து மக்களை மீட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.