இந்தியாவின் பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் மட்டுமே ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வந்த அஜய்குமார், அவ்வபோது ஒரு சில முக்கிய ராணுவ அதிகாரிகளை மட்டுமே நேரில் பேசி வந்தார். இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சனை நீடித்து வரும் இந்த சூழலில் பாதுகாப்புத்துறை செயலாளருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு இருப்பது மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 30 பேரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் நேற்று அலுவலகம் செல்லவில்லை எனவும், அதே சமயம் ராஜ்நாத் சிங் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.