
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மக்களை தன் வசம் ஈர்த்துவரும் டிக்டாக்செயலி போன்று இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள சிங்காரி அதன் ஆட்டத்தை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.
சமீப காலங்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்தது தான் சீனாவில் உருவாக்கப்பட்ட டிக்டாக் செயலி. இதனை கடந்த மே மாதம் மட்டும் 11 கோடியே 20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என்பது தான் ஆச்சரியம்.
தற்போது இந்தியாவும் சீனாவும் எல்லையில் சண்டையிட்டு கொண்டிருக்கும் இந்த சூழலில் சீன செயலியான டிக்டாக்கிற்கு போட்டியாக உள்ளூர் செயலியான சிங்காரி செல்போன்களில் செயலி களம் கண்டுள்ளது.

ஒடிஷாவைச் சேர்ந்த Biswatma Nayak தனது நண்பர் சித்தார்த் கவுதமுடன் இணைந்து இந்த சிங்காரி செயலியினை உருவாக்கியுள்ளார். இதில் வீடியோக்களை பதிவேற்ற, பதிவிறக்கம் செய்ய மட்டுமின்றி புதிய நண்பர்களைத் தேடி அவர்களுடன் அரட்டை அடிக்கவும் இந்த செயலியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதோடு வாட்ஸ்அப் ஸ்டேடஸில் வைப்பதற்கான வீடியோவையும் தாமே உருவாக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. GIF, ஸ்டிக்கர், புகைப்படம் என எதையும் உங்களுக்கு பிடித்தபடி நீங்கள் தயாரித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக சிங்காரி செயலியில் உங்களது வீடியோ வேகமாக பரவி அதிகமாக பாய்ன்ட் கிடைக்கும்போது அது பணமாக மாறும் வகையில் உள்ளது தான் கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டிக்டாக் செயலிக்கு போட்டியாக அதை நகலெடுத்தது போல இந்திய தயாரிப்பாக ஏப்ரலில் வந்த மித்ரன் செயலி 50 லட்சத்திற்கும் மேலானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மற்றொரு உள்ளூர் தயாரிப்பாக சிங்காரியும் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது