எல்லையில் இருந்த அசாதாரண நிலை பற்றி தகவலளிக்க உளவுத்துறை தவறிவிட்டதா என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் சோனியாகாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய – சீன எல்லை மோதல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திரிணாமூல காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் கே. சந்திர சேகர ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கலந்துகொண்டு பேசிய சோனியாகாந்தி “முன்பே இந்த கூட்டத்தை அரசு கூட்டியிருக்க வேண்டும். தாமதமான கூட்டத்தில் கூட, அரசியல் கட்சிகள் இருட்டில் வைக்கப்பட்டு, குறிப்பிட்ட கேள்விகள் எழுப்பப்படுகின்றன” என்று தெரிவித்தார். மேலும் “சீன ராணுவத்தினர் எந்த தேதியில் இந்தியாவில் ஊடுருவினர்..? அவர்கள் அத்துமீறியதை அரசு எப்போது கண்டுபிடித்தது..? அரசுக்கு இன்னும் சாட்டிலைட் புகைப்படங்கள் கிடைக்கவில்லையா..? அசாதாரண நிலை பற்றி தகவலளிக்க உளவுத்துறை தவறிவிட்டதா..” என்று பல கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

திமுக சார்பில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், சீனா விவகாரத்தில் பிரதமர் மோடியின் சமீபத்திய அறிக்கைகளை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், நாட்டுப்பற்று என்று வரும் நாம் அனைவரும் ஒன்றுப்பட்டுள்ளோம். அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளை முன்னரே நடத்தியிருக்க வேண்டும். அதை நடத்த தவறியதால் தான், தற்போது உயிர்களை இழந்துள்ளோம்” என்று கூறியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.