இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. அந்தப் போட்டிக்குப் பின்னர் தோனி எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனையடுத்து வெளியான இந்திய அணி வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதனிடையே தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்ற வதந்திகளும் வந்து கொண்டேதான் இருந்தன. இந்நிலையில், அவர் கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து அவர் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டார். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இனி தோனி இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என தெரிவித்துள்ளார்
பேட்டில் அவர் கூறியதாவது “தோனி எப்போதுமே ஒரு கணிக்க முடியாத வீரர். அதில் மாற்றுக்கருத்தில்லை. இங்கு துரதிஷ்டம் என்னவென்றால் ஐபிஎல் போட்டிகள்தான் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்கையை தீர்மானிக்கும் விதமாக அமைந்ததுதான். ஆனால், அவரது நேரமோ என்னவோ ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம்தான்” என கூறியுள்ளார்.