மாமல்லபுரம் கடற்கரை அருகே கரை ஒதுங்கிய பேரலில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட விலை மதிப்புமிக்க போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில், நேற்று சந்தேகத்திற்குரிய இரும்பு பேரல் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், அந்த பேரலை உடைத்த போது அதில் 100-க்கும் அதிகமான பாக்கெட்டுகள் இருந்தன. அதில் டீ தூள் என்று ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்ததோடு, சீன மொழியில் ஏதோ குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த பாக்கெட்டுகளை பிரித்து பார்த்ததில் அதில் வெள்ளை நிற புவுடர் இருப்பது தெரியவந்தது. அது போதைப் பொருளாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், அதனை ஆய்வு செய்ய அனுப்பினர். அந்த ஆய்வில், மெத்தாம்பிடமைன் என்ற சக்திவாய்ந்த போதை பொருள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. சுமார் 78 கிலோ எடை கொண்ட இந்த போதைப் பொருளின் மதிப்பு 1.5 கோடிக்கு மேல் இருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த பிரதமர் மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பிற்கு பிறகு, ஏராளமான சீன பயணிகள் அங்கு வந்தனர். சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் சீன போதை பொருள் கும்பல் தமிழகத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மேலும் டீ தூள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
லடாக் மோதல் காரணமாக இந்திய – சீன எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், நாடு முழுவதும் சீனப் பொருட்களுக்கான கண்காணிப்பு திவீரமடைந்துள்ளது. இதனால் கடத்தல் கும்பல், போதை பொருளை கடல் மார்க்கமாக கடத்த முயன்றிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். எனினும் இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.